ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்களை ரிசர்வ் வங்கி சிறிய அளவு உயர்த்தி உள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏடிஎம்களில் இருந்து மாதத்திற்கு 5 முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கவும், இதர வங்கிகளில் இருந்து மூன்று முறை கட்டணம் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கியது. இந்நிலையில் ஐந்து மற்றும் மூன்று இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால் அவற்றுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதை தற்போது அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி 20 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம் 21 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இத்துடன் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உதாரணமாக எஸ்பிஐ வங்கி தற்போது ஜிஎஸ்டி வரி தவிர்த்து பரிவர்த்தனை ஒன்றுக்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. வேறு ஒரு வங்கி ஏடிஎம்மில், எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் பணமெடுத்தால், அதற்கு வாடிக்கையாளர்களின் வங்கி மற்றொரு வங்கிக்கு அளிக்க வேண்டிய கட்டணத்தை 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. மேலும் பணமாற்றம் அல்லாத இதர பரிமாற்றங்களுக்கு கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.