போப் பிரான்சிஸின் சொற்பொழிவைக் கேட்பதற்காக தேவாலயத்திற்கு வந்த மாற்றுத்திறனாளி சிறுவன் அவர் அணிந்திருந்த தொப்பியை அடம்பிடித்து கேட்டு வாங்கியுள்ளான்.
போப் பிரான்சிஸின் சொற்பொழிவைக் கேட்பதற்காக வாடிகன் தேவாலயத்திற்கு ஒரு மாற்றுத்திறனாளி சிறுவன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தான். இதனையடுத்து அந்த சிறுவன் பாதுகாவலர்களை தாண்டி மேடையில் உட்கார்ந்திருந்த போப் பிரான்சிஸிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்துவிட்டான். இதனைத்தொடர்ந்து அந்த சிறுவன் மேடையை விட்டு இறங்க மறுத்ததால் போப் பிரான்சிஸின் அருகிலேயே அவனுக்காக மற்றொரு இருக்கை போடப்பட்டது.
அதன்பின் அந்த சிறுவன் போப்பின் அருகிலேயே அமர்ந்திருந்தான். மேலும் அந்த சிறுவன் போப் பிரான்சிஸ் அணிந்திருக்கும் வெள்ளை தொப்பியை தன்னிடம் தருமாறு கேட்டு அடம் பிடித்துள்ளான். இதனால் போப் பிரான்சிஸ் தான் அணிந்திருந்தது போலவே மற்றொரு தொப்பியை வரவழைத்து அந்தச் சிறுவனுக்கு வழங்கினார். குறிப்பாக அந்த சிறுவன் “கேளுங்கள் தரப்படும்” என்ற இறைவார்த்தையை தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டி விட்டதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.