கொரோனா தொற்றுக்கு முதல் முறையாக “ஜெர்மன் ஷெப்பர்ட்”என்ற ஒரு நாய் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது.
ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிசன் மஹோனி ஆகியோர் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகையிடம், தங்கள் ஏழு வயது நாய் ‘பட்டி’ ஏப்ரல் மாதத்தின் மத்தியில் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், பல வாரங்களாக நோய்த்தொற்றின் பிடியில் இருந்ததாகவும் கூறினர். மே மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் சோதனை மேற்கொண்டதில் பட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல் நாய், நியூயார்க்கில் வாழும் ” ஜெர்மன் ஷெப்பர்ட்” என்று அமெரிக்க வேளாண்மைத் துறை ஜூன் மாதம் செய்தி வெளியிட்டது. நாய் பட்டியின் உடல்நிலை மோசமடைந்து ஜூலை 11 அன்று அந்த நாய் உயிரிழந்து விட்டது.
அந்த நாய்க்கு புற்றுநோய் இருந்ததும் இரத்த பரிசோதனையில் கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அது இறந்ததா என்பது தெளிவாக கூறமுடியவில்லை. அமெரிக்காவில் பல விலங்குகளில் கொரோனா தொற்று இருப்பதை வேளாண்மைத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி மற்றும் சிங்கம் ஆகியவை கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டு வருகிறது.
விலங்குகளிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று வேளாண்மைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆனால் சில சூழ்நிலைகளில் நோய்தொற்று மக்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவக்கூடும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.