Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடிபட்டு உயிருக்கு போராடிய நாய்… பதறும் நெஞ்சம்… 5 குட்டிகளை காப்பாற்ற உதவிய நபர்!

வேலூரில் அடிபட்டு உயிரிழந்த  நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து  5 குட்டிகளை பத்திரமாக கால்நடை டாக்டர் மீட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் மக்கான் சிக்னல் அருகில்  நேற்று முன்தினம் காலை நேரத்தில் தெருநாய் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஓன்று திடீரென்று நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஐயோ பாவம்!… இதில் அந்த நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

அந்தசமயத்தில் அவ்வழியாக வந்தவர் தண்டபாணி.. சலவன்பேட்டையை சேர்ந்த இவர்  அந்த நாயை பார்த்ததும் உடனே அருகில் இருக்கின்ற அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றார். தண்டபாணியின் இந்த கருணை மனதை பார்த்து அங்கிருந்தவர்களுக்கும்  உதவி செய்ய வேண்டும் என மனம் இறங்கியது. ஆம் அங்கிருந்த சிலரும் நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு பணியில் கால்நடை டாக்டர் ரவிசங்கர் இருந்தார்.  உயிருக்கு போராடிய பெண் நாய்க்கு செவிலியர்கள் குளுக்கோஸ் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அந்த நாய் பரிதாபமாக இறந்து போனது. இதனால் அங்கிருந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்து விட்டனர். என்னதான் நாயாக இருந்தாலும் அது உயிர் அல்லாவா!

விபத்தில் பலியான நாய்

இந்நிலையில் உயிரிழந்த  பெண் நாயின் வயிற்றில் குட்டிகள் இருப்பது மருத்துவருக்கு தெரியவந்தது. சரி.. நாயை தான் காப்பாற்ற முடியவில்லை.. குட்டியையாவது காப்பாற்றலாம் என்று முடிவு செய்த கால்நடை டாக்டர் ரவிசங்கர், உடனே  அவசர அறுவை சிகிச்சை மூலம் நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகளையும் பத்திரமாக உயிருடன் மீட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் அந்த டாக்டர் அருகில் உள்ள ஒரு மருந்து கடையில் இருந்து குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில் வாங்கி கொண்டு வந்து நாய் குட்டிகளுக்கு பால் கொடுத்து பசியாற்றினார்.அதனைதொடர்ந்து முதலில் காப்பற்ற நினைத்த தண்டபாணி அந்த 5 குட்டிகளையும் வீட்டில்  வளர்ப்பதற்கு கொண்டு சென்றார்.

இதுகுறித்து கால்நடை டாக்டர் ரவிசங்கர் பேசுகையில், நாய் உயிரிழந்த ஒரு சில நிமிடங்களில் வயிற்றில் இருக்கின்ற குட்டிகளும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.ஆனால் 5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை செய்து குட்டிகள் உயிருடன் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டு விட்டது. தற்போது நாய்க்குட்டிகள் அனைத்தும் நலமாக இருக்கின்றன. தெருநாய் தானே என்று அலட்சியமாக விட்டு சென்று விடாமல், அவ்வழியாக சென்றவர் அதை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவரது நல்ல உள்ளத்துக்காக நானும் எனது கடமையை சரியாக செய்துவிட்டேன்.

இதுபோன்ற நிகழ்வு நடந்ததே இல்லை. இதுவரை நான் கால்நடைகளுக்கு செய்த அறுவை சிகிச்சையிலேயே  இந்த சம்பவம் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றார். தெருநாய் தானே நமக்கு என்ன? என்று அவர் விட்டு சென்றுவிட்டால் தாயுடன் சேர்ந்து குட்டிகளும் பரிதாபமாக இறந்திருக்கும். அவரது (தண்டபாணி) செயல் உண்மையிலேயே நெஞ்சை உருக வைத்துள்ளது.

Categories

Tech |