குடிநீர் தொட்டி திறக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரி உடனடியாக நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பஸ் நிலையத்தின் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் சமையல் மற்றும் குடிநீர் தேவைக்காக அதன் மாடிப் பகுதியில் குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் ஆழ்துளை கிணறு மூலம் மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த குடிநீர் தொட்டி மூடப்படாத நிலையில் இருப்பதால் காற்று வீசும் போதெல்லாம் தொட்டிக்குள் தூசி விழுந்து தண்ணீர் மாசுபடுகிறது. மேலும் தொட்டியைச் சுற்றி செடி கொடிகள் சூழ்ந்துள்ளதால் அதன் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய குடிநீர் தொட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.