நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஆனந்தகுமார் என்பவர் அதே பகுதியிலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் ஆனந்தகுமார் இன்று காலை தன்னுடைய மகள் இன்சிகாவுடன் (3) வயல்வெளி பாதையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, அங்குள்ள பனைமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டு என்ற விஷ வண்டுகள் இருவரையும் தாக்கியது.
இதையடுத்து வண்டு கடித்ததில் படுகாயமடைந்த தந்தை, மகள் இருவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.. இருப்பினும் இன்சிகா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட தந்தை ஆனந்தகுமாரும் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இறந்த ஆனந்தகுமாருக்கு சங்கரி (36) என்ற மனைவியும், பவித்ரா (5) என்ற மற்றொரு மகளும் உள்ளனர்.
கதண்டு வண்டுகள் தாக்கி தந்தை, மகள் இறந்து போன சம்பவம் கடலங்குடி கிராமத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், விஷ வண்டு தாக்குதலில் காயமடைந்த 3 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.