ஒகேனக்கல் காவேரி ஆற்றில் மீனவரை தாக்கி கொன்ற முதலை ஊட்டமலை காவிரி ஆற்றில் சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு அருகே முசல்மடுவு பகுதியில், சென்ற 3ம் தேதி காவிரியில் காட்ராஜ் என்பவர், மீன்பிடிக்க சென்றுள்ளார். அதன் பின் அவர் திரும்பி வராத நிலையில் கரையோரம் சடலமாக கிடந்துள்ளார். அவரது உடலில் வேறு எந்த ஒரு காயங்களும் இல்லாத நிலையில், குடல் முழுவதும் வெளியே சரிந்து இருந்து உள்ளது. எனவே, மீன்பிடிக்க காட்ராஜ் சென்ற போது, ஆற்றில் கிடந்த முதலை அவரை கடித்திருக்கலாம் எனவும், அதனிடம் இருந்து தப்பித்து கரைக்கு வந்த பிறகு அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மீனவர்கள் சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஒகேனக்கல் அருகே ஊட்டமலை வழியாக பாயும் காவிரி ஆற்றில் சுற்றுவட்டார பகுதி மக்கள் மீன் பிடிப்பது, ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று ஊட்டமலை காவிரியாற்றில், 10அடி நீளமுடைய முதலை ஒன்று, பாறை மீது உட்கார்ந்தபடி இருந்தது. இதை பார்த்த மக்கள் பீதியடைந்துள்ளனர். இது பற்றி கிராம மக்கள் கூறுகையில், “கடந்த 3ம் தேதி மீன்பிடிக்க சென்ற காட்ராஜ் என்பவரை தாக்கி கொன்ற முதலை, தற்போது ஊட்டமலை காவிரி ஆற்றில் சுற்றித் திரிகிறது. எனவே, மேலும் உயிர்ப்பலிகள் ஏற்படும் முன்பாக, இந்த முதலையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.