கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தேனி பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குரங்கணி காட்டுத்தீ விபத்தை ஏற்பட்டதில் இருந்து காட்டுத்தீ ஏற்படாதவாறு வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதமே வெயில் அடிக்க தொடங்கிய நிலையில் தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்தது. பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் மேற்குத் தொடர்ச்சி மலையானது கேரளா முதல் குஜராத் வரை பரவியுள்ளது.
இந்த மலைகளில் 33% தேனி மாவட்டத்திலேயே தான் இருக்கிறது. இந்நிலையில் கோடைக்காலத்திற்கு முன்பாகவே கூடலூர், மேகமலை, தேவாரம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருவதால் மலைகளில் தீப்பற்றி எரிகிறது. காட்டுத்தீயின் காரணமாக வனவிலங்குகள் காட்டில் இருக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் தவித்து வருகின்றன.
தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய தேனி மாவட்ட வன அலுவலர், தேனியில் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 100 கி.மீ தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப் பட்டுள்ளது என்றும் தாற்காலிகமாக 30 தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.