தமிழகத்தில் இன்று மேலும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக 2வது இடத்திலிருக்கும் தமிழகம் தான் கொரோனா பரிசோதனையில் முதலிடத்தில் இருக்கிறது.
ஒருபக்கம் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், மறுபக்கம் நம்பிக்கையளிக்கும் வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இந்த நிலையில் தான் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகின. அதில், தமிழகத்தில் இன்று மட்டும் 5,849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,643 ல் இருந்து 1,86,492 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 சேர்க்கப்பட்டுள்ளது.. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை இன்று மட்டும் 58,475 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான பரிசோதனை இதுவரை மொத்தம் 20,15,147 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,26,670 ல் இருந்து 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 70.56 % பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது 51,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.