மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியே வராத பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தோற்று பரவத் தொடங்கியதும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த காரணத்தினால் சார்லோட்டே நகரை சேர்ந்த ரேச்சர் ப்ரமெர்ட் மருத்துவர்களின் அறிவுரைப்படி மூன்று வாரங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். வெளியில் சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வரும் கணவனும் தனி அறையிலேயே இருந்துள்ளார். கணவரது மருந்தகத்தில் பணிபுரிந்த பரமிஸ்ட் மற்றும் வீட்டிற்கு மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்யும் பெண் என மூன்று பேரை மட்டுமே அந்தப் பெண் இந்த மூன்று வாரங்களாக சந்தித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மளிகை பொருட்களை டோர் டெலிவரி செய்த பெண்ணிற்கு கொரோனா உறுதி ஆகியுள்ள நிலையில், அந்த பெண்ணை ஒரு முறை கூட நான் தொட்டதில்லை எனவும் ஆனால் அவர் கொண்டு வரும் பொருட்களை கையில் கிளவுஸ் போடாமல் எடுத்து வைத்ததாகவும் கூறுகிறார் ரேச்சர். இந்த சூழலில்தான் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது “மருத்துவர்களின் ஆலோசனைப்படி சரியான விஷயத்தை தான் செய்கிறோம் என மூன்று வாரங்கள் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் தொற்று உறுதி செய்யப்பட்டவுடன் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளேன்” இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு யார் மூலமாக தொற்று பரவியது என்னும் விசாரணையை அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.