உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அலுவகத்திலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சஹரன்பூர் அருகே நாகூர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து பேசிய மூத்த போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார், ” நாகூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் தற்கொலைக்கு முன்னதாக அவர் ஒரு குறிப்பை எழுதி வைத்துள்ளார். அதில், தான் கொரோனா வைரஸால் பெரும் அச்சத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர் நீண்ட காலமாக மனஅழுத்ததில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக” அதிகாரி கூறினார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் இருப்பது உண்மைதான். ஆனால் அரசு அதிகாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.