வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள தங்காசேரி பகுதியில் அரசால் வழங்கப்பட்ட காலணி தொகுப்பு வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு காற்றுக்காக தனது வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் அதிகாலையில் லேசாக மழை தூரியதால் அவர் வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொகுப்பு வீடு திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இதில் பாண்டியம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கிய பாண்டியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.