தெலுங்கானாவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
33 வயதான அந்த செய்தியாளருக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சேனலான டி.வி 5 – இன் நிருபர் மனோஜ் (33), இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்து ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதன்னாபேட்டில் வசிக்கும் மனோஜ்-க்கு கடந்த ஜூன் 4 ம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரது சகோதரர் என அனைவரும் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த நிருபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பேசிய மருத்துவர், ” அவர் இருதரப்பு நிமோனிடிஸ் மற்றும் கடுமையான சுவாசக் குழாய் நோய்க்குறி (ARDS) நோயால் பாதிக்கப்பட்டார். சுவாச தசைகள் உட்பட அனைத்து தசைகளையும் முடக்கும் மயஸ்தீனியா கிராவிஸும் அவருக்கு கண்டறியப்பட்டது.
அவர் தைமஸ் சுரப்பி அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டுள்ளார். இருப்பினும் இந்த அறுவை சிகிச்சை எப்போது நடத்தப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை” என தெரிவித்துள்ளனர். மேலும் நேற்று வரை அவர் நலமோடு இருந்ததாவும் இன்று காலை அவர் திடீரென அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த பத்திரிகையாளர் உயிரிழந்த செய்தி வெளிவந்துள்ளது.