தமிழகத்தில் சிறுவர்கள் ஆபாச படங்களைப் பகிர்பவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி சென்னையில் சிறார்களின் ஆபாசபடங்களை பகிர்ந்த 30 பேர் கொண்ட பட்டியல் காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தற்காத்துக் கொள்ள காவல்துறைக்கு என்கவுண்டர் செய்ய அனுமதி இருப்பது போல் பெண்கள் தங்களை பாதுகாப்பதற்கு கொலை செய்தாலும் தவறில்லை என்று ரவி குறிப்பிட்டார். மேலும் சிறார்கள் ஆபாச படங்கள் தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருப்பதாக காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.