திருவண்ணாமலையில்பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி பிறந்தநாள் கொண்டாடிய சிறுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆதம் – சரிதா தம்பதியின் இரண்டாவது குழந்தை சபியாவுக்கு நேற்று மூன்றாவது பிறந்த நாள் என்பதால், பிறந்த நாளை கொண்டாடுவதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே செயல்படும் பிரபல ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் ஐஸ் கேக் வாங்கி உள்ளனர். வாங்கிய அரை மணி நேரத்தில் குழந்தை சபியா மற்றும் குடும்பத்தினர் நண்பர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கேக் வெட்டிய சபியா மற்றும் ஆதாமின் 5 வயது முதல் குழந்தை இர்பான் ஆகிய இருவரும் கேக்கை சாப்பிட்டு உள்ளனர். மேலும் ஆதாம் மற்றும் அவர்கள் நண்பர்கள் கேக்கை சாப்பிட்டதாக சொல்லப்படுகிறது. கேக் சாப்பிட்ட சபியாவுக்கு ஒரு சில நிமிடத்திலே பேதி மற்றும் வாந்தி எடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆதாம் மற்றும் அவரது குடும்பத்தினர் உடனடியாக சபியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
மேலும் கேக்கில் ஒருவித கெட்டுப்போன வாசனை வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கேக்குடன் ஆதாம் மற்றும் அவர்களது நண்பர்கள் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்வீட் மற்றும் பிரபல பேக்கரிக்கு வந்து நியாயம் கேட்டுள்ளனர். அப்பொழுது பேக்கரியில் நின்றிருந்த ஒருவர் குழந்தை செத்தா போய்விட்டது என்று சொன்னதாக சொல்லப்படுகிறது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஆதாம் மற்றும் அவரது நண்பர்கள் கடை முன்பாக அமர்ந்து கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் அந்த கேக்கை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.