தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் 7ம் தேதி முதல் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்கலாம் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்க்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே போல திருச்செந்தூர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் 7ம் தேதி மதுக்கடைகளை திறக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பல நிபந்தனைகள் விதித்தது.
நீதிமன்ற நிபந்தனை:
தனி மனித இடைவெளியை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். 5 நபர்களுக்கு மேல் கூட்டக் கூடாது.மதுபானக் கடைகளின் பார்களை திறக்கக் கூடாது.மூன்று நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும். மதுவங்குவோரின் பெயர், முகவரி, ஆதார் என்னுடன் ரசீது தரவேண்டும்.ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வர வேண்டும்.ஆன்லைன் மூலம் வாங்குவோருக்கு இரண்டு மது பாட்டில் வழங்கலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
புதிய மனு தாக்கல்:
இந்த நிலையில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி மற்றும் சில வழக்கறிஞ்சர்கள் சார்பாக நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுக்கடைகளை திறக்க நீதிமன்றம் வழங்கிய நிபந்தனைகள் முறையாக பின்பட்டப்படவில்லை. அதிகமானோர் ஒன்றுகூடி மதுவாங்கி சென்றனர். இதனால் கொரோனா நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கின்றது எனவே மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
அடுக்கப்பட்ட ஆதாரங்கள்:
மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கை நேற்று காலை அவசர வழக்காக விசாரித்தனர். அப்போது தனிமனித இடைவெளி பின்பற்றப்படாதது. 5 பேருக்கும் அதிகமானோர் கூட்டமாக கூடி மதுவங்கிச் சென்றது என புகைப்படங்களுடன் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை மாலைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தீர்ப்பு:
நேற்று மாலை இந்த வழக்கின் வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள், மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் கடைபிடிக்கவில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிக்கவேண்டும், கடைகளை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். 5 பேருக்கு மேல் நிற்க கூடாது என அனைத்தும் முழுமையாக பின்பற்றவில்லை. இதே நிலை தொடருமானால் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே மதுவை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிர்ச்சியான தமிழக அரசு:
தமிழகத்தில் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்ற உத்தரவுக்கு அதிமுக கூட்டணி கட்சியில் உள்ள கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி தமிழகத்தின் நிதிநிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து விட்டது. மத்திய அரசும் குறைவான நிதியை தரும் இந்த சூழ்நிலையில், ஊரடங்கு காரணமாக மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயும் முடங்கி இருக்கும் நிலையில் டாஸ்மாக் வருவாய் ஓரளவு கைகொடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில் தற்போது நீதிமன்றத்தின் உத்தரவு அதிமுக அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவசரப்பட்டு விட்டோமோ?
கூட்டணியில் உள்ள கட்சியினரை பகைத்துக் கொண்டு, பல எதிர்ப்புகளையும் மீறி டாஸ்மாக் கடையை திறந்திருந்தோம்.அதிகமானோர் கூடியதன் விளைவால் இப்படி ஒரு சூழல் ஏற்பட்டு விட்டதே ! என்று அதிமுக தலைமை நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர். இதனால் ஆளும் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறது. 5 , 5 பேராக மதுவை கொடுத்தால் கூட நாம் இந்நேரத்திற்கு ஏதோ ஒரு வருவாயை பெற்றுக்கொண்டு இருந்து இருக்கலாம். இப்போது அவசரப்பட்டு மொத்தத்தையும் இழந்து விட்டோமே என்ற எண்ணத்திலும் ஆளும் தரப்பு நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ந்து போயுள்ளது.