Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஒரு யானை மரணம்…!!

மலப்புரம் மாவட்டத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவந்த ஆண் யானை நேற்று பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள அர்தலாகுன்னூ பகுதி அருகே ஒரு தோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காயங்களுடன் ஆண் யானை ஒன்று விழுந்துகிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர், யானையை மீட்டு கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தனர். தலைமை கால்நடை மருத்துவர் அருண் சக்காரியா தலைமையில் அதற்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று (ஜூன் 8) சிகிச்சைப் பலனின்றி அந்த யானை பரிதாபமாக பலியானது.

இந்த நிகழ்வு குறித்து மன்னார்காடு (தென்) பிரிவு வனத்துறை அலுவலர் சஜிகுமார் கூறுகையில், “மற்ற காட்டு யானைகளுடன் மோதல் நடந்ததாக தெரிகின்றது. இந்த மோதலில் அந்த யானைக்கு வயிறு, நாக்கு, ஆண் உறுப்பு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு யானையின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை (நேற்று) உயிரிழந்தது” என்றார்.

அண்டை மாவட்டமான பாலக்காட்டில், கடந்த மாதம் 27ஆம் தேதி வெடிமருந்து வைக்கப்பட்ட தேங்காயை தின்று கருவுற்ற யானை பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்த யானையின் மரணம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |