ஸ்பெயின் நாட்டில் தனது தாயை கொலை செய்து அவரது உடல் பாகங்களை டப்பாக்களில் அடைத்து சாப்பிட்டு வந்த இளைஞனுக்கு தற்போது நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட்டின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் ஆல்பர்ட்டோ சான்ஸ் கோமஸ் ( 28 ) எனும் இளைஞன் தனது 60 வயது தாயை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு அவருடைய உடலை துண்டு துண்டாக வெட்டி டப்பாக்களில் போட்டு வைத்து அந்த உடல் பாகங்களில் சிலவற்றை இரண்டு வாரங்களுக்கு பிறகு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆல்பர்ட்டோ தாயின் நெருங்கிய தோழி ஒருவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது தோழியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து ஆல்பர்ட்டோ வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆல்பர்ட்டோ-வின் உடல் பாகங்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று ஆல்பர்ட்டோ விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அப்போது ஆல்பர்ட்டோ, தான் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தான் தனது தாயை கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் நீதிபதி அதனை ஏற்க மறுத்து ஆல்பர்ட்டோ-க்கு மிக கடுமையான தண்டனையாக 15 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.