இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதலிரண்டு போட்டியிலும் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியது. இதனிடையே இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இரு அணிகளும் மோதின.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரன் பிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணியின் நிரோஷன் டிக்வெல்லா ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து குசல் மெண்டிஸ் 13, அவிஷ்கா பெர்னான்டோ 20, ஒஷாடா பெர்னான்டோ 6 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் நிலைத்து ஆடிய குசல் பெர்ரேரா அரைசதம் அடித்து 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய கேப்டன் பின்ச் 25 பந்துகளில் 3 சிக்சர்கள், 1 பவுண்டரி என 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்ததும் இரண்டு பவுண்டரிகளை அடித்து மிரட்டிய ஸ்மித் வந்த வேகத்திலேயே 13 ரன்னிலும், பென் மெக்டெர்மாட் 5 ரன்னிலும் வெளியேறினர்.
அதன்பின் வார்னருடன் ஜோடி சேர்ந்த ஆஷ்டன் டர்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதேவேளையில் வார்னர் அரைசதம் அடித்த வார்னர் நடப்புத் தொடரில் மூன்றாவது முறையாக அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி மூன்று விக்கெட்டை மட்டும் இழந்து 17.4 ஓவரில் 145 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. வார்னர் 57 ரன்னுடனும், டர்னர் 22 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.
இந்த வெற்றியின்மூலம் ஆஸ்திரேலிய அணி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் (100, 60, 57) என 217 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு உதவிய வார்னர் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Australia seal a series whitewash!
David Warner ends unbeaten on 57, while Ashton Turner helped finish things off with a 15-ball 22*.#AUSvSL SCORECARD 👉 https://t.co/wWLglfl8sf pic.twitter.com/mNeL51fGMP
— ICC (@ICC) November 1, 2019