தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இயற்கை வளத்தில் எழில் கொஞ்சும் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்திடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் 2 மாடிகள் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேனி மாவட்டத்தின் இயற்கை, கலை, இலக்கியம், பண்பாடு, சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் விளக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வாழ்ந்ததர்க்கான சான்றாக உள்ள கல்வெட்டுகள், தஞ்சை மன்னர்கள், மருது சகோதரர்கள் ஆகியோர் போரில் பயன்படுத்திய கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கை வீரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் உள்ள நடுகல்லும், முதுமக்கள்தாழி மற்றும் அனைத்து வகையான இசைக் கருவிகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் விளையும் காபி, தேயிலை, காய்கறிகள், தோட்டப்பயிர்கள் போன்றவற்றின் விவரங்களும், மேகமலை வனச்சரகத்தில் உள்ள பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் எலும்புகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் வாரத்தில் வெள்ளிக்கிழமை, மாதத்தில் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களை தவிர அனைத்து தினங்களிலும் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.