பறந்து சென்ற இரண்டு மயில்கள் எதிர்பாராதவிதமாக காகிதக் கூழில் விழுந்து பறக்க முடியாமல் தத்தளித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் காகித ஆலையில் செய்தித்தாள்கள் முதலான பல்வேறு வகையான காகிதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த காகிதங்களை தயாரிப்பதற்காக பல்வேறு வகைகள் மரத்தூள்கள் மற்றும் பழைய பேப்பர்களை கூழாக்கி அதில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரித்த பேப்பர் கூழை ஒரு பகுதியில் தற்காலிகமாக தேக்கி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காகிதக்கூழ் தேக்கிவைக்கப்பட்டிருந்த பகுதி வழியாக இரண்டு மயில்கள் பறந்து சென்று உள்ளன. அந்த மயில்கள் எதிர்பாராதவிதமாக காகிதக்கூழில் விழுந்து பறக்க முடியாமல் தத்தளித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காகிதக் கூழில் சிக்கியிருந்த இரண்டு மயில்களை உயிருடன் மீட்டனர். பின்னர் இரண்டு மயில்களும் வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளன.