Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என் குறையை கேட்க மாட்டுக்காங்க… தீ குளிக்க வந்த முதியவர்… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

 தீ குளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் காலை முதியவர் தீகுளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை பிடித்து கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த முதியவர் லாடபுரம் கிராமத்தைச் சார்ந்த பரமசிவன் என்பதும் மேலும் அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமான கூரைவீடு இடிந்துவிட்டதால் அதே இடத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார்.

அந்தப்பகுதியில் உள்ள பொதுப் பாதையை இரண்டு பேர் ஆக்கிரமிப்பு செய்து  10 அடி உயர சுவர் ஒன்றை கட்டி அந்தப் பாதை வழியாக அவரை நடக்க விடாமலும் வீடு கட்டும் பணியை தடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். அந்த சுவரை அகற்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்துள்ளார்.

ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவர் தீ குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து பரமசிவம் அங்கிருந்து சென்றுள்ளார்.

Categories

Tech |