பஞ்சாப் முதல்வர் மனைவியிடம் செல்போனில் பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுக்கொண்டு 23,00,000 ரூபாயை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியும், பாட்டியாலா மக்களவை எம்.பியானவர் பிரனீத் கவுர். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் பிரனீத் கவுருக்கு சில தினங்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையின் மேலாளர் பேசுகிறேன் என்று கூறி, சம்பளத்தை டெப்பாசிட் செய்வதற்காக உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார்.
உடனே சிறிதும் யோசிக்காமல் பிரனீத் கவுர் வங்கிக் கணக்கு எண், ஏ.டி.எம் பின் நம்பர், சிவிசி மற்றும் ஓடிபி எண் என அனைத்தையும் அவர் கேட்டதன் படி கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்திலேயே பிரனீத் கவுரின் வங்கிக் கணக்கில் இருந்து 23,00,000 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனை கண்ட பிரனீத் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து பஞ்சாப் போலீசார் புகாரின்படி விசாரணை நடத்தி, செல்போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை ஆராய்ந்து மோசடியில் ஈடுபட்டவரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வைத்து கைது செய்துள்ளனர்.வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி இது போன்ற விவரங்கள் யார் கேட்டாலும் கொடுக்காதீர்கள் என்று வங்கி நிர்வாகிகள் தொடர்ந்து அறிவுறுத்தினாலும் இதனை கவனத்தில் கொள்ளாமல், ஒரு மாநில முதல்வரின் மனைவியும், எம்.பி.யுமான பிரனீத் கவுர் 23,00,000 ரூபாயை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.