வையம்பட்டி அருகே தேர்வில் தோல்வியடைந்ததால் 12ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகேயுள்ள பழையகோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகேசன். இவருக்கு 17 வயதில் ரேணுகா என்ற மகள் உள்ளார்.. இவர், ஓந்தாம்பட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார்..
இந்நிலையில் நேற்று திடீரென காலை தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி ரேணுகா 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.. தன்னுடன் படித்த சக தோழிகள் தேர்ச்சி பெற்ற நிலையில் தாம் மட்டும் தோல்வியடைந்து விட்டோமே என்ற மன வேதனையில் இருந்த ரேணுகா, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் வேகமாக ஓடிவந்து மாணவியை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.. இதுதொடர்பாக வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.