திருச்சி அருகே மகன் இறந்த சோகத்தில் போதைக்கு அடிமையான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகேயுள்ள உறையூர் இந்திராநகரை சேர்ந்தவர் மகான்.. இவருக்கு வயது 34.. தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வரும் இவருக்கு ரேவதி(28) என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்தது.. ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தது.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது குழந்தை தண்ணீருக்குள் விழுந்து இறந்து விட்டது. இதனால் மிகுந்த மனவேதனையுடன் இருந்த மகான் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
அடிக்கடி மகனை நினைத்து குடித்துக்கொண்டே இருந்த அவரை காஜாமலையிலுள்ள குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து கடந்த வாரம் வீட்டுக்கு வந்த மகான் சிகிச்சைக்கான மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவி ரேவதியிடம், செலவிற்கு பணம் கேட்டுள்ளார் மகான். பணம் கொடுத்தால் மீண்டும் மதுவுக்கு அடிமையாகி விடுவார் என்ற பயத்தில் ரேவதி பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளார்.. இதனால், விரக்தியடைந்து வீட்டின் அறைக்குள் சென்ற மகான் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தூக்குமாட்டிக் கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ரேவதி ஜன்னல் வழியாக பார்த்துவிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்தார்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் வேகமாக ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு தூக்கில் தொங்கிய மகானை உடனடியாக மீட்டு ஆட்டோவில் வைத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரின்பேரில் உறையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் மகன் இறந்த சோகத்தில் மனமுடைந்து மதுப்பழக்கத்துக்கு ஆளான தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.