மே 3ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர்.
முதல்வர் முகாம் அலுவலகத்தில் நிதி துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அதேபோல ஊரடங்கு தளர்த்துவது குறித்தும், நெறிமுறைகள் வரையறுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது.
மே 3ம் தேதியோடு 2ம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கடந்த 27ம் தேதி நடைபெற்ற மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். மேலும், நேற்று முன் தினம் தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்து மாவட்டங்களிலும் எந்தெந்த தொழில்கள் இயங்க அனுமதி வழங்கலாம் என அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தியிருந்தார். மேலும், கொரோனா குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு தளர்வு வழங்குவது குறித்து குழு ஆய்வு நடத்தியது.
ஏற்கனேவே இந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் மே3 ம் தேதி வரை எந்த தளர்வும் இல்லாமல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மே3ம் தேதிக்கு பிறகு கட்டுமான தொழில், 100 நாள் வேலை திட்டம் போன்றவை தொடங்கலாம் என அரசு கூறியிருந்தது. தற்போது, இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்கள் இன்னும் வெளிவரவில்லை.