பாகிஸ்தானில் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்கப்பட்டதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள நங்கனா சாகிப் பகுதியை சேர்ந்த சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே கடத்தப்பட்ட அப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி வற்புறுத்தி இஸ்லாம் மதத்திற்கு மாற்றியதாகவும், பின்னர் இஸ்லாமிய இளைஞர் ஒருவருக்கு அவரை விருப்பமின்றி திருமணம் செய்து வைத்தாகவும் தகவல் வெளியானது. இதனால் அந்த பெண்ணின் பெற்றோர் கடுமையான வேதனையடைந்தனர்.
அப்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் வீட்டுப் பெண் விடுவிக்கப்பட்டு பத்திரமாக வீடு திரும்புவதற்கு தங்களுக்கு உதவும்படி பாக். பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆகியோர் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாபஸ் பெறும்படி அந்த கும்பல் தங்களை வீடு தேடி வந்து மிரட்டுவதாகவும் பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானில் உள்ள சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கும் பாக் பிரதமருக்கு வலியுறுத்தியிருந்தார்.