Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

போராட்ட வாழ்க்கை… பொதுவுடைமை வேட்கை… அவர்தான் நல்லகண்ணு!

மக்கள் உரிமைகளுக்கான போராட்டக் களத்தில் எப்பொதும் முன்னிலையில் நின்று சமரசமின்றி போராடும் தோழர் நல்லகண்ணு இன்று தனது 95ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரைப் பற்றிய சிறிய தொகுப்பு…

போராட்டமே வாழ்க்கையென வாழும் நல்லகண்ணு, தனது 15 வயதிலிருந்து சமூக முன்னேற்றத்துக்காக போராடிவருகிறார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வைகுண்டத்தில் பிறந்து, தனது 18 வயதில் செங்கொடியேந்தி போராட்ட களம் சென்றவர் தோழர் நல்லகண்ணு. அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்களே என்று கூறுபவர்கள் கூட நல்லகண்ணுவை அதற்குள் அடக்குவதில்லை. அதற்கு அவருடைய நேர்மையே காரணம்.

எளிமையை கடைபிடித்து வாழும் அவருடைய ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையிலிருந்து தற்போதுவரை இருக்கக்கூடிய அவருடைய பேச்சு, எழுத்து மற்றும் போராட்டங்கள் என அனைத்தும் பல்வேறு வகைகளில் ஒடுக்கப்படுபவர்களின் உரிமைகளுக்கானதாகவே இருக்கிறது. கம்யூனிஸ்ட்களின் பணி என்பது சுரண்டல்களுக்கு எதிராக போராடுவதும், எப்பொழுதும் ஒடுக்கப்படுபவர்களின் குரலாக இருப்பதுமே… அதை எப்போதும் சரியாகச் செய்தவர் தோழர் நல்லகண்ணு.

நல்லகண்ணு பிறந்தநாள்  நல்லகண்ணு 95வது பிறந்த நாள் வாழ்த்து  cpi nallakannu birthday  comrade nallakannu birthday

சாதிய கொடுமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவரும் இவர், எங்களைப் பொறுத்தவரை சாதியக் கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும். சாதி உணர்வு என்பது வேண்டுமென்றே திட்டுமிட்டு தொடர்ந்து வளர்க்கப்பட்டு வந்தாலும், அது ஒரு மாயை என்கிறார்.

அவர் பிறந்த ஊரான வைகுண்டம் பகுதியில் ஆதினங்கள், மடாதிபதிகளின் கீழ் இருந்த நிலங்களில் வேலைபார்த்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கூலியாக தரப்படும் நெல் அளவை முறையாக வழங்க வேண்டும் என்று போராடி அதில் வெற்றியும் கண்டார். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதித்தபோது, தலைமறைவு வாழ்க்கையில் இருந்த அவர், விவசாயிகளைச் சந்தித்து கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

அப்போது கட்சித் தோழர் ஒருவரின் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவரை காவலர்கள் சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்ட சகல கொடுமைகளையும் அவர் எதிர்கொண்டார். காவலர்கள் கொடூரமாக அவரை தாக்கி, மீசை முடியை ஒவ்வொன்றாக பிய்த்து எடுத்து சித்ரவதை செய்து சிறையிலடைத்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் அவர் மீசை வைப்பதில்லை.

நல்லகண்ணு பிறந்தநாள்  நல்லகண்ணு 94வது பிறந்த நாள் வாழ்த்து  cpi nallakannu birthday

புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், சிறைச்சாலையில் ரஷ்ய இலக்கியங்களையும் கம்யூனிஸ தத்துவங்களையும் தீவிரமாக வாசித்தார். சிறையிலிருந்து வெளிவரும் போது சிவப்பின் மீதான காதல் அவருக்கு கூடியிருந்தது. முன்னிலும் தீவிரமாக இயங்கத்தொடங்கினார். சங்க இலக்கியங்களில் இருந்து சமகால இலக்கியங்கள் வரை வாசிக்கும் தோழர் நல்லகண்ணு, ஒரு இளம் தோழர் எழுதும் கட்டுரை நன்றாக இருந்தால் உடனடியாக அழைத்துப் பாராட்டும் அளவுக்கு திறந்த மனம் படைத்தவர்.

அதேபோல, நல்ல திரைப்படங்களை பார்த்தாலும் அதனை பாராட்டுவதற்கும் அவர் தயங்கியதில்லை. மக்களிடையே அன்பு கொண்ட அவருடைய 80ஆவது பிறந்தநாளான்று அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு கோடி ரூபாய் வசூலித்து பரிசாக கொடுத்தனர். ஒரு கோடி ரூபாய் எனக்கு எதற்கு என்று கூறி தனது கட்சிக்கே அதை திருப்பித் தந்தார்.

நல்லகண்ணு பிறந்தநாள்  நல்லகண்ணு 94வது பிறந்த நாள் வாழ்த்து  cpi nallakannu birthday

கட்சி அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கட்சியின் காரில் செல்லுங்கள் என்று கட்சித்தோழர்கள் கூறியபோது, நம்முடைய கட்சி மக்கள் பணத்தில் செயல்படுகிறது. தேவையில்லாமல் மக்கள் பணத்தை செலவு செய்யக்கூடாது என்று கூறியதிலிருந்தே அவருடைய சித்தாந்தப்பற்றை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. திருநெல்வேலியில் சாதிக் கலவரம் நடந்தபோது அவரது மாமனர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அதற்கு இழப்பீடாக அரசு தந்த தொகையை அந்த சாதிக் கலவரத்தில் தந்தையை இழந்த இரண்டு சிறுமிகளின் கல்விச் செலவிற்காக தந்துவிட்டார். இதுவரை, பொருளாக தனக்கென்று எதையும் அவர் சேர்த்து வைக்கவில்லை. மாறாக அவர் உயிராய் நேசிக்கும் மக்களைச் சேர்த்து வைத்திருக்கிறார். மக்களுக்காக வாழ்ந்து வரும் மகத்தான மனிதருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Categories

Tech |