விலை நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்கும்போது பாம்பு கடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள காமேஸ்வரம் பைரவன் காடு பகுதியில் வசித்து வருபவர் பூமாலை-தமயந்தி தம்பதியினர். தமயந்தி ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆவர். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கடலை சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு பதுங்கியிருந்த பாம்பு ஒன்று தமயந்தியை கடித்துவிட்டது.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் தமயந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கீழையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.