ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் தலைநகர் தூனிசில் (Tunis) செயல்பட்டு வருகிறது அமெரிக்கத் தூதரகம். இந்த நிலையில் இந்த தூதரகத்திற்கு நேற்று இரண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை அங்கு திடீரென வெடிக்கச் செய்தனர்.
தற்கொலை தாக்குதலில் அவர்கள் இருவரும் பலியாகி விட்டனர். அதுமட்டுமில்லாமல் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். மேலும் 5 பேர் படுகாயமடைந்து உயிர் தப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்தத் தாக்குதலை நடத்தியது ஐஎஸ் அமைப்பினராக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்தநிலையில், துனீசில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தூதரகத்திற்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இல்லை என்றாலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.