புளியமரம் சாய்ந்ததில் விவசாயி தனது ஆடு மாடுகளுடன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள எர்ரம்பட்டி பகுதியில் பழனியாண்டி என்ற விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மழை வருவதற்கு முன்பாக பழனியாண்டி தனது இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகளை பிடித்து மாட்டு கொட்டகைக்குள் கட்ட சென்றுள்ளார்.
அதன்பின் கனமழை பெய்ததால் அவர் அங்கிருந்து வெளியே வராமல் மாட்டு கொட்டகைக்குள்ளேயே அமர்ந்து இருந்துள்ளார். சிறிது நேரத்தில் பலத்த சூறை காற்று வீசியதில் அருகிலிருந்த பழமைவாய்ந்த புளியமரம் ஒன்று மாட்டுக் கொட்டகை மீது விழுந்துள்ளது. இதில் மாட்டுக்கொட்டகைக்குள் இருந்த பழனியாண்டியுடன் இரண்டு மாடுகள் மற்றும் இரண்டு ஆடுகள் அனைத்தும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பழனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.