சிவகாசி பட்டாசு ஆலைகளில் இன்று 14 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை கோரி அர்ஜுன் கோபால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் 3ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் முறையாக தயாரிக்கப்படவில்லை என்றும், தடை செய்யப்பட்ட மூலக்கூறுகளைப் பயன்படுத்தி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் பட்டாசு ஆலைகள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் இயங்கும் பட்டாசு ஆலைகள் விதிகளை மீறி பட்டாசு தயாரித்ததா? பட்டாசு தயாரிப்பில் தடை செய்யப்பட்ட மூலக் கூறுகள் பயன்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை சிபிஐ இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சிபிஐ கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சுப்பையன் மற்றும் சுந்தரவேல் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
சுமார் 14 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் பட்டாசு ஆய்வு நடத்திய நிலையில், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் அதன் கலவைகளையும், செய்து முடிக்கப்பட்ட அனைத்து வகை பட்டாசுகளையும் அட்டைப் பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து எடுத்துச் சென்றனர். மத்திய ஆய்வகங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.