Categories
Uncategorized மாநில செய்திகள்

கோவில் கோவிலாக இருக்கணும்; கோவில் சிலருக்கானது அல்ல; ஐகோர்ட் கிளை கருத்து

கோயில் கோயிலாக இருக்க வேண்டும்; வியாபார தளமாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

இராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பல கோயில்கள், மடங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கோவில்களுக்கு வெளிநாட்டில் இருந்து வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. கோவிலுக்கு நேரடியாக வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி, அதற்கான ரசிதினை பெற்று செல்கின்றனர்.

ஆனால் வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் பக்தர்கள், கோவில் இணையதளங்களை வழியாகவே அதற்கான காணிக்கையை செலுத்துகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் கோவில், சென்னை வடபழனி ஆண்டாள் கோயில் உள்பட சில முக்கிய கோயில்களின் பெயர்களில் சில தனி நபர்கள் இணையதள முகவரியை வைத்துக்கொண்டு,

கோவிலுக்கு பக்தர்கள் அனுப்பும் காணிக்கைகளை பெற்று மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பாக மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில்கள் மற்றும் மடங்களின் பெயர்களில் போலியாக செயல்படும், தனிநபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்கவும், அவ்வாறு இணைதளங்கள் வைத்திருப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் – சத்யநாராயணன் பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கோவில் பெயரில் தனிநபர்கள் வைத்திருந்த இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்த சமய அறநிலைத்துறையின் மயிலாடுதுறை இணை ஆணையர் நேரில் ஆஜராகி,  இது தொடர்பான விளக்கம் அளித்தார்.

அப்போது நீதிபதிகள்,  கோவிலின் பெயரில் மற்றொருவர் இணையதளம் சேவையை எவ்வாறு வைத்திருந்தார் ? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்கள் நீங்கள் தான். ஆகவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து தனிநபர்கள் கோவிலின் பெயரில் நடத்தும் இணையதளம் மூலமாக ஆயிரக்கணக்கில் அல்ல, லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர்.

இதனை தடுக்க முழுமையாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  கோவில் கோயிலாக இருக்க வேண்டும். கோவில் என்பது வழிபாட்டுக்கான தலம் தானே தவிர,  வியாபாரத்திற்கான தளம் அல்ல. அதோடு கோவில் என்பது சிலருக்கானது அல்ல. அது பொதுமக்களுக்கானது என கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  சைபர் கிரைம் ஏடிஜிபியை இந்த வழக்கின் எதிர்மனுதாரராக சேர்த்து வழக்கை அக்டோபர் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.

Categories

Tech |