கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கம் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே போவதன் காரணமாக, உலக அளவில் சீனா தனிமைப்பட்டுள்ளது. இந்தநிலையில், தற்போது 37 நாடுகளில், கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் 80 ஆயிரம் பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஆம், சீனாவின் எல்லைகளை தாண்டி, தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலும் உயிர்பலி வாங்கி வருகிறது கொரோனா.
சீனாவில் மட்டும் இதுவரையில் மொத்தம் 2, 715 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவில் மட்டும் தற்போது, 78,064 பேர் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சீனாவில் புதிதாக 500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் இறந்துள்ளனர். அதேசமயம் சிகிச்சை பெற்றுவந்த 27, 323 பேர் பூரண குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில், மிகவும் இரகசியம் காத்து வரும் சீனாவில், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும், அதிகபட்ச இரகசியம் காக்கப்படலாம் என உலக நாடுகளுக்கிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.