கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவாநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி வீரலட்சுமி. இவருக்கு வயது 31. கந்தசாமி-வீரலட்சுமி இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பழைய இரும்புக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக பழைய இரும்பு கடையில் சரிவர வியாபாரம் ஏதும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மகள்களை எப்படி படிக்க வைப்பது? என வீரலட்சுமி புலம்பி வந்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த வீரலட்சுமி தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து மீண்டும் வீரலட்சுமி ஈரோடு மாவட்டத்திற்கு வந்து அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 27ஆம் தேதி வீரலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.