ஏழ்மையிலும் நேர்மையாக செயல்பட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வண்டிக்கார தெருவில் வசித்து வரும் கார்த்திக் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவரின் கணவர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் மகேஸ்வரி தனது வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று தனது வங்கிக் கணக்கிலிருந்து 11 ரூபாய் பணம் எடுத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது 22,000 இருந்தது. ஆனால் வங்கி கணக்கு புத்தகத்தில் 11 ஆயிரம் பணம் எடுத்ததாக அச்சிடப்பட்டிருந்தது.
இதை அடுத்து மகேஸ்வரி தனது கணவர் கார்த்திக் மற்றும் அப்பகுதி வார்டு கவுன்சிலர் ரஜினி சின்னா உள்ளிட்டோர் உதவியுடன் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று மேலாளரிடம் தகவல் கொடுத்தார். இதனால் காசாளர் வரவழைக்கப்பட்டு இதுகுறித்து கேட்ட போது அவர் வங்கியில் சற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் கவனக்குறைவாக பணத்தை கூடுதலாக கொடுத்து விட்டதும் கூடுதலாக கொடுத்த பணத்துக்கு ஈடாக தனது சொந்த பணத்தை வங்கியில் செலுத்தியதும் தெரிய வந்தது. இதன் பின்னர் 11 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட காசாளர் மகேஸ்வரிக்கு நன்றியை தெரிவித்தார். ஏழ்மையிலும் நேர்மையாக செயல்பட்ட மகேஸ்வரிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.