பெண்ணொருவர் பத்து வருடத்தில் எட்டு பேரை திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிஷோர் என்பவர் கட்டுமான ஒப்பந்தகாரராக இருக்கிறார். இவரது மனைவி சென்ற வருடம் மரணமடைந்த நிலையில் கிஷோர் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது டெல்லியை சேர்ந்த மேட்ரிமோனி ஏஜென்சி தனது விளம்பரத்தில் விவாகரத்து செய்யப்பட்ட நபர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் தக்க துணையை தேடி தருவதாக குறிப்பிட்டிருந்தது. இதனை பார்த்த கிஷோர் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நிறுவனத்தின் உரிமையாளரான மஞ்சு கண்ணா என்பவர் மோனிகா மாலிக் என்பவரை அறிமுகம் செய்து வைத்ததோடு இவர் தங்களுக்கேற்ற மணமகள் என்றும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கிஷோரும் மோனிகாவும் நேரில் சந்தித்து பேசி ஆகஸ்ட் மாதம் 2019 ஆம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிஷோரின் வீட்டில் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திருமணம் முடிந்து இரண்டு மாதத்திற்குள் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு மோனிகா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் கிஷார் அதிர்ச்சியடைந்து மேட்ரிமோனியல் ஏஜென்சியை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்களும் கிஷோர் மீது பொய்யான வழக்கை பதிவு செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து மோனிகாவின் முந்தைய கணவர் பற்றிய தகவல்களை சேகரித்து அவரிடம் விசாரிக்கையில் அவரையும் இதே போன்று ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கிஷோர் காவல் நிலையத்தில் மோனிகா மாலிக் மீது புகார் கொடுத்தார். புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கடந்த 10 வருடங்களில் மட்டும் மோனிகா 8 முதியவர்களை திருமணம் செய்து ஏமாற்றியது தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் மோசடி, பணம் பறித்தல், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் மோனிகா மற்றும்இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.