குடிப்பழக்கத்தினால் குடும்பத்தை பிரிந்த சோகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எச்சூர் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி தனது வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்து ஆனந்தனின் குடும்பத்தினர் இவரை விட்டு தனியாக சென்று வசித்து வந்துள்ளனர். இதனை அடுத்து தன்னுடைய குடிப்பழக்கத்தினால் குடும்பத்தினர் தன்னை விட்டு பிரிந்து விட்டதால் அதிக மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.