சென்னை அசோக் நகர் அம்பேத்கர் குடிசைப் பகுதியில் வசித்து வருபவர் கைலாசம். ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவரது மனைவி பெயர் லலிதா(35). கைலாசம் நேற்றிரவு ஆட்டோ ஓட்டச் சென்றபின், லலிதா தனது மகளுடன் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.
தனியாக இருந்த லலிதாவின் வீட்டிற்குள் நள்ளிரவு ஒரு மணியளவில் கஞ்சா போதையில் ஒரு இளைஞர் வந்துள்ளார். அவரைக் கண்ட லலிதா அச்சத்தில் கூச்சலிட்டுள்ளார். இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் புகுந்த இளைஞனை விரட்டிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
பின்பு, அந்த இளைஞனை எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆய்வாளர் விஜயரங்கன் நடத்திய விசாரணையில், அந்த இளைஞன் அதே பகுதியச் சேர்ந்த பிரகாஷ்(20) என்பது தெரியவந்தது. கஞ்சா போதையில் இருந்த பிரகாஷ் மீது ஏற்கனவே அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.