ஓசூர் அருகே டிக் டாக்கில் வீடியோ வெளியிடுவதற்காக மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகிலுள்ள பார்வதி நகரில் வசித்து வருபவர் சக்திவேல். இவருக்கு 22 வயதில் வெற்றிவேல் என்ற மகன் இருக்கிறார்.. வெற்றிவேல் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு கல்யாணமாகி மனைவியும், 2 வயதில் சரண் என்ற மகனும் இருக்கின்றனர்..
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெற்றிவேல், தன்னுடைய நண்பர்கள் 2 பேருடன் ஓசூர் தேர்பேட்டை பகுதியிலுள்ள ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக சென்றார். அப்போது அவர் மதுகுடித்து விட்டு போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது வெற்றிவேல், மொபைல்போனில் ‘டிக் டாக்’ வீடியோ வெளியிடுவதற்காக ஒரு மீனை எடுத்து உயிருடன் விழுங்கி விட்டார். அப்போது வெற்றிவேல் பச்சையாக விழுங்கிய மீன் எதிர்பாராத விதமாக அவரின் சுவாசக்குழாயில் சிக்க அவரால் மூச்சு விட முடியவில்லை..
இதையடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட வெற்றிவேலை அவரது நண்பர்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துர்கள், வெற்றிவேல் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்கள். அதனைத்தொடர்ந்து அவரது உடல் நேற்று உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது விழுங்கப்பட்ட மீன் வெளியில் எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், வெற்றிவேல் குடிபோதையில் இருந்ததன் காரணமாக மீனை உயிருடன் விழுங்கினா? அல்லது நண்பர்களுடன் ‘டிக் டாக்’ செய்தபோது பந்தயத்திற்காக இது போன்று செய்தாரா? என விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர். இந்த சம்பவம் குறித்து ஓசூர் டவுன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.