விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள புல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்.. 34 வயதுடைய இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பொறியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 7ஆம் தேதி தனது மனைவி அருள்மொழி (28) மற்றும் மகள் சிஸ்டிகா (4), ஆகியோருடன் சென்னை வண்டலூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார்.
மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 10ஆம் தேதி இவருக்கும், இவருடைய மனைவி அருள்மொழிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் கொரோனா தீவிரத்தால் நிலைமை மோசமானதால் மணிகண்டன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மனைவி அருள்மொழி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மணிகண்டன் இன்று அதிகாலை சுமார் 12.30 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனால் தூத்துக்குடியில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி கொரோனா தொற்றால் தூத்துக்குடியைச் சேர்ந்த மூதாட்டி பலியானார். அதைத்தொடர்ந்து கடந்த மே 15ஆம் தேதி கடலாடி பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், இன்று (ஜூன் 13) வெம்பக்கோட்டை அருகிலுள்ள புல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மணிகண்டனின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்டு, டிவிடி சிக்னல் அருகிலுள்ள மையவாடியில் முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.