சேலத்தில் ஆயுதப்படை காவலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் 32 வயதுடைய பாலாஜி. இவர் 2013ஆம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சேலம் ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் பாலாஜி மனவேதனையில் இருந்துள்ளார்.
மேலும் மது குடிக்கும் பழக்கமும் பாலாஜிக்கு இருந்தது. இந்நிலையில் இன்று காலை பாலாஜியின் அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவரது மனைவி ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்துகொண்ட பாலாஜி சில நபர்களிடம் கடன் வாங்கியிருந்தார். அதனால் அவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.