திண்டுக்கல் மாவட்டத்தில் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளவையும் எட்டியதால் அமராவதி ஆற்றிற்கு அணையிலிருந்து 250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூஞ்சோலை கிராமத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட தரை பாலத்தை அடித்து சென்றது.
இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுப்பணித் துறையினர் ஆற்றில் தண்ணீரின் அளவு குறையாத காரணத்தினால் பாலத்தை சரிசெய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே அப்பகுதியில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்வதற்காக சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும்போது ஆபத்தான முறையில் உறவினர்கள் ஆற்றை கடந்து சென்றனர்.