தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு துறை சார்பில் ஆதார் எண் வங்கி கணக்கு எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் ஆதார்-வங்கி கணக்கு எண் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அங்கு 33,000 பேரின் விவரங்களை பெற முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.
இதனால் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இணைப்பு மேற்கொள்ளாதவர்கள் உடனடியாக கூட்டுறவு துறை மூலம் அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராஜேந்திரன் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் 10 லட்சம் ரேஷன் கார்டு தாரர்கள் இருக்கும் நிலையில் 31,000 பேருக்கு மட்டுமே வங்கி கணக்கு இல்லாமல் இருந்தது. இவர்களுக்கு புதிதாக மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வங்கி கணக்கு எண் மற்றும் ஆதார் எண் இணைக்காமல் இருந்த நிலையில் 53,922 தொடர்பு கொண்டபோது அதற்கான உரிய ஆவணங்களை தந்துள்ளனர். ஆனால் 33,000 பேரும் விவரங்களை பெற முடியாததோடு, சிலர் தங்களுடைய ஆவணங்களை தருவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்கள். அரசின் திட்டங்களுக்காக விவரங்களை கேட்கும்போது அனைவரும் மறுக்காமல் தர வேண்டும். மேலும் 33,000 பேரும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து அதற்கான விவரங்களை நியாயவிலைக் கடை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.