ஆடி மாதம் பிறப்பையொட்டி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஆடி மாதம் அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். அந்தவகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த பெரிய மாரியம்மன் கோவில் திறக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது மாரியம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன்பின் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இதனையடுத்து ஈரோடு காவல்துறையினர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்கள் சன்னதியில் சூடம் ஏற்றவும், கோவில் வளாகத்தில் உட்காரவும் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு உடனே வெளியில் சென்றார்கள். இதனைத் தொடர்ந்து கருங்கல்பாளையம் சின்ன பெரியமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டு அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.