தலீபான்கள் தலைவரை பேட்டி எடுத்த முன்னனி ஊடகத்தின் பெண் ஊழியர் ஒருவர் ஆப்கானை விட்டு வெளியேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை அடுத்து தலீபான்கள் அந்நாட்டை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை ‘இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று பெயர் மாற்றம் செய்யப்போவதாகவும் ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் ஆப்கானின் முன்னணி ஊடகத்தில் பணிபுரியும் அர்கன்ட் என்ற பெண் ஊடகவியலாளர் தலீபான்களின் தலைவரான அப்துல்லாஹ் ஹேமத்தை இரண்டு மாதங்களுக்கு முன்பு நேர்காணல் செய்துள்ளார். அந்த நேர்காணலின் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகியது.
மேலும் இந்த நேர்காணலில் துணிச்சலாக கேள்வி கேட்ட பெண் ஊடகவியலாளரை அனைவரும் பாராட்டினர். இதன் மூலம் அர்கன்ட் உலக புகழ்பெற்ற பெண்மணியாகத் திகழ்ந்தார். இந்த நிலையில் இவர் தலீபான்களுக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது குறித்து அர்கன்ட் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் “எப்பொழுது பெண்களுக்கு ஆப்கானில் பாதுகாப்பு சூழல் உருவாகிறோதோ அப்பொழுதே நான் திரும்புவேன். அதிலும் தலீபான்களுக்கு பயந்து வெளியேறிய இலட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருத்தி. குறிப்பாக தலீபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளதால் ஊடகத்தில் வேலை புரியும் பெண்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை” என்று கூறியுள்ளார்.