குழந்தைகள் தன்னை தேடி வாடுவதாக கட்டீரா ஹஸ்மி என்ற ஆப்கானிஸ்தான் பெண் தனது சோகத்தை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கஸ்னி நகரைச் சேர்ந்தவர் 32 வயதான கட்டீரா ஹஸ்மி. இவர் ஆப்கானில் காவல்துறையில் பணிபுரிந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்பார்வை பறிபோனதால் இந்தியா வந்துள்ளார். தற்பொழுது அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வருகிறார். மேலும் கட்டீரா ஹஸ்மி தனது கண்களை இழந்த சோகத்தை அனைவரிடமும் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதில் “ஆப்கானிஸ்தான் காவல்துறையில் நான் பணியாற்றி வந்தேன். எனக்கு ஏற்கனவே ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூன்று மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்தேன். அப்பொழுது நான் தலீபான்களின் முகத்தை பார்த்து விட்டதாக கூறி அவர்கள் என் தலை, மார்பு, கழுத்துப் பகுதியை கடுமையாக தாக்கியதில் படுகாயமடைந்தேன்.
மேலும் அவர்கள் என் கண்களையும் பறித்து விட்டார்கள். குறிப்பாக என் தந்தையும் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர் தான். அவருக்கு நான் காவல் துறையில் வேலை பார்ப்பது பிடிக்கவில்லை. இதனால் அவர் தலீபான்களை தூண்டி விட்டு எனக்கு இப்படி ஒரு மோசமான நிலையை உருவாக்கியுள்ளார். இதனையடுத்து நான் ஆப்கானிஸ்தானில் சிகிச்சை பெற முடியாததால் என் கணவருடன் இந்தியா வந்தேன். எனக்கு இந்தியாவில் தான் குழந்தை பிறந்தது. எனது உடலில் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி சூட்டினால் காயம் ஏற்பட்டதோடு பல பிரச்சனைகளும் உள்ளது.
மேலும் மருத்துவர்கள் எனக்கு திரும்ப கண்பார்வை கிடைக்காது என்று கூறியுள்ளனர். இதற்கிடையில் என் பிள்ளைகள் ஆப்கானில் பயத்தோடு இருக்கிறார்கள். அவர்களை என் சகோதரி மற்றும் தாயார் கவனித்துக் கொண்டு வருகிறார்கள். என் குழந்தைகள் என்னிடம் வர வேண்டும் என்று அழுகிறார்கள். இதற்கு ஒரேவழி நான் அவர்களிடம் செல்ல வேண்டும் இல்லையெனில் என் குழந்தைகள் இங்கு வரவேண்டும். நான் காவல்துறையில் பணி புரிந்ததால் எனக்கு நஷ்ட ஈடாக 13,000 AFN வந்து கொண்டு இருந்தது. ஆனால் தலீபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பிறகு எனக்கு அந்த பணமும் வரவில்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளார்.