ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வந்த இந்திய பெண் ஒருவர் தனது பயண அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு அந்நாட்டில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இதனையடுத்து மக்கள் அங்கிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு விமானம் மூலம் தப்பிச் சென்று வருகின்றனர். இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனைச் சேர்ந்த சவிதா சஹி என்ற பெண் கடந்த 8 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்து வருகிறார். இவர் அமெரிக்கா ராணுவ மருத்துவ குழுவில் பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து கடந்த ஞாயிறு அன்று காபூலை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து தப்பி இரு தினங்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில் “இதுவரை இல்லாத மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் இவ்வாறு மாற்றமடையும் என்பதை நான் நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. எங்கு திரும்பினாலும் மக்களின் ஓலச்சத்தம் கேட்டது. கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதி காபூலை தலீபான்கள் எதிர்பாராத விதமாக கைப்பற்றினர். இதனால் மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றுவதற்காக போராடினர். இதனை அடுத்த அமெரிக்கா ராணுவம் மற்றும் நேட்டோ படைகளில் பணிபுரியும் மக்கள் மாலை 6 மணியளவில் ராணுவ விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளை அணுகினர். இதற்கு பிறகு தலீபான்கள் ஏவுகணைகளை வீசத் தொடங்கியுள்ளனர்.
அத்தகைய சூழலில் அனைவரும் விமான நிலையத்திலுள்ள முகாமுக்கு திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் அவர்கள் இரவு அல்லது மறுநாள் காலை வரை பொறுத்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை அடுத்து காலை 3.30 மணியளவில் காபூலில் இருந்து வெவ்வேறு விமானங்களில் மக்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் இந்திய தூதரக அதிகாரிகளின் உதவியுடன் அமெரிக்கா ராணுவ மருத்துவ முகாமில் இருந்து மொத்தம் 7 பேர் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள விமானத்திற்கு காலை 6:10 மணியளவில் அமர்த்தப்பட்டனர். பலர் விமானத்தில் இருக்கை கூட இன்றி தரையில் அமர்ந்து பயணித்தனர்” என்று கூறியுள்ளார்