நாட்டில் நிலவும் பதற்றம் நிறைந்த சூழ்நிலையானது 6 மாதத்திற்குள் மாறிவிடும் என ஆப்கானிஸ்தான் அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நேட்டோ படைகள் ஆப்கானில் இருந்து வெளியேறுகின்றனர். இந்த நிலையில் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தலீபான்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களையும் கைப்பற்றி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் தலீபான்கள்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமை ஆப்கான் நாடாளுமன்றத்தில் நடந்த அவசரக் கூட்டம் ஒன்றில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது “அமெரிக்க நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்ததன் காரணமாக தலீபான்களுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. மாறாக மக்களிடையே பெரும் சந்தேகம் மற்றும் குழப்பம் தான் நிலவியது. இது மட்டுமின்றி நாட்டின் பாதுகாப்பு மோசமடைந்ததற்கு அமெரிக்கப் படைகள் வெளியேறுவது தான் காரணம். மேலும் தாலிபான்களுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும். இதனால் தலீபான்கள் வன்முறையை கையாண்டால் அவர்களை தடுக்கும் திறன் அரசுக்கு உள்ளது. இப்போது நீடித்து வரும் இந்தப் போரானது 6 மாதத்திற்குள் மாறிவிடும். அதில் தலீபான்களின் நிலைமை பின்னோக்கி சென்றுவிடும்” எனக் கூறியுள்ளார்.