பாதுகாப்பு துறை அமைச்சர் வீட்டில் தலீபான்கள் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறுவதால் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தற்காலிக பாதுகாப்பு துறை அமைச்சரான பிஸ்மில்லா கான் முஹம்மதின் வீட்டை நேற்றிரவு தலீபான்கள் முற்றுகையிட்டுள்ளனர். அதன் பின்பு அவரின் வீட்டில் குண்டுகளை வீசி தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் அவரின் வீட்டில் இருந்த பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனை அறிந்து கொண்ட பாதுகாப்பு படையினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தியதில் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் மற்றும் அவரது குடும்பம் காவல் துறையினரால் வேறு ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் தப்பியுள்ளனர். இதனை கண்டித்து அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதில் “தலீபான்கள் தங்களது தாக்குதல் மற்றும் வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 தலீபான்களையும் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்களிடமிருந்து பல வகையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அமைச்சர்களின் வீடுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.